பூங்கோதை கனகராஜன் குறுங்கவிதைகள் எழுதி நம்மைத் திகைக்க வைக்கிறார். அவரது குறுங்கவிதைகள் வாசகனை ஏமாற்றாத தன்மையைப் பெற்றிருக்கின்றன. மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும், வானவில் நிறங்கள் அவரது குறுங்கவிதைகளில் இழையோடுகின்றன. "இரக்கம் அதிகம். இலை விழுந்தாலும் அசைகிறது நீர்"
பூங்கோதை கனகராஜன் குறுங்கவிதைகள் எழுதி நம்மைத் திகைக்க வைக்கிறார். அவரது குறுங்கவிதைகள் வாசகனை ஏமாற்றாத தன்மையைப் பெற்றிருக்கின்றன. மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும், வானவில் நிறங்கள் அவரது குறுங்கவிதைகளில் இழையோடுகின்றன.
“இரக்கம் அதிகம்.
இலை விழுந்தாலும்
அசைகிறது நீர்” என்ற கவிதை தமிழுக்குப் புதியது என்றே நினைக்கிறேன். ” வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய” வள்ளலாரை, என் மனக்கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தியது இக்கவிதை.
“இருள் தனது தலமைக்கு வெளிச்சத்தைக் காவல் வைப்பதில்லை”
என்கிறார் இவர். உள்ளங்கைகளுக்குள் வைத்து வானத்தை உருட்டுகிற லாவகம் தெரிந்த ஒரு படைப்பாளி இவர் என்பதை உணர்த்துகிற தத்துவ வரிகள் இவை.
“தண்ணீர் தெளிகிறது
மீன்கள் கலங்குகின்றன” என்கிற இக்கவிதை ஒரு கலைடாஸ்கோப். இக்கவிதை உருவாக்கும் உருத்திரிபுகள் வாசகனை உறுத்தாத தத்துவ விசாரம்.
இப்படியே இன்னும் இன்னும் நிமிர்ந்தே நில்லுங்கள். நிலவும் உங்களுக்கு நெற்றிப்பொட்டாகும்.
கோ. வசந்தகுமாரன்